சினிமா
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

Published On 2020-07-28 14:10 IST   |   Update On 2020-07-28 14:10:00 IST
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதாவை பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இவர்கள் மீது வடபழனி காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். பின்னர் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். 

என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான், அந்த சேனலை தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து, நானும், எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்படி, வடபழனி மகளிர் போலீஸ் நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News