சினிமா
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

அரக்கர்கள் இருவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் - எம்.எஸ்.பாஸ்கர் கோபம்

Published On 2020-05-13 18:28 IST   |   Update On 2020-05-13 18:28:00 IST
பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், மாணவி எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்? 

ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு? 

முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவிப் பெண் சிறுமதுரை ஜெயஶ்ரீக்கும், மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம்  கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். 

இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது. 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News