சினிமா
கொரோனா நோயாளிகளுக்கு பாடகி கனிகா கபூர் பிளாஸ்மா தானம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க பாடகி கனிகா கபூர் முன்வந்துள்ளார்.
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பிரபல இந்தி பாடகி கனிகா கபூர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் 100 பேருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையானது. பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தன. போலீசாரும் கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து அவர் வீடு திரும்பி உள்ளார். உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் செயலில் ஈடுபட்டதாக கனிகா கபூர் மீது 269 மற்றும் 270 பிரிவின் கீழ் லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி அவரது வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க கனிகா கபூர் முன்வந்துள்ளார். அவரது ரத்தத்தை மருத்துவர்கள் சோதனைக்கு எடுத்துள்ளனர். சோதனையின் முடிவில் பிளாஸ்மா திரவம் அளிக்கலாம் என கூறப்பட்டால் அவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.