சினிமா
ரஜினி- விஜய்

விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜினி ரசிகர் கைது

Published On 2020-04-24 16:39 IST   |   Update On 2020-04-24 16:39:00 IST
கொரோனா நிதி அதிகம் கொடுத்தது யார் என்பதில் தகராறு ஏற்பட்டு விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜினி ரசிகர் கைது செய்ய பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கூலிதொழிலாளியான இவர் விஜய் ரசிகர்.

அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (22) ரஜினி ரசிகர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் 2 பேரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது போதை தலைக்கேறியதும் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.  ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு கைகளால் யுவராஜை கொடூரமாக தாக்கி கீழே தள்ளினார். இதில் யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதனை பார்த்ததும் தினேஷ்பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு யுவராஜுன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர்.

அவர்கள் யுவராஜை தட்டி எழுப்பி பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.

இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று யுவராஜுன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்தனர்.

Similar News