சினிமா
நிக் கோர்டரோ

கொரோனாவால் காலை இழந்த ஹாலிவுட் நடிகர்

Published On 2020-04-20 14:50 IST   |   Update On 2020-04-20 14:50:00 IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரின் வலது காலை மருத்துவர்கள் துண்டித்தனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31-ந்தேதி மயங்கி விழுந்தார். மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.

கொரோனா பாதிப்பால் அவரது காலில் ரத்தம் உறைந்தது. வலது கால் விரல்களுக்கு ரத்தம் செல்லவில்லை. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடலுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டு, உள் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வலது காலை துண்டிக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்று குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினரின் அனுமதியின் பேரில், நிக் கோர்டரோவின் வலது காலை மருத்துவர்கள் துண்டித்தனர். தற்போது நிக் கோர்டரோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக அவரது மனைவி அமண்டா கூட்ஸ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Similar News