சினிமா
மீண்டும் கமலுடன் இணைந்த அனிருத்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கும் அனிருத், மீண்டும் கமலுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் அடுத்ததாக கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் படத்தின் 2-ம் பாகத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் பணியாற்றி வந்த ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார். அதேபோல் கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறை.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று உருவாகி உள்ளது. இப்பாடலை அனிருத்தும், கமலும் பாடியுள்ளனர். இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.