சினிமா
தயாரிப்பாளர் சங்கம் லோகோ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2020-04-17 08:15 GMT   |   Update On 2020-04-17 08:15 GMT
தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கிறது. இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது: 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. மே மாதம் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (தபால் அல்லது கூரியரில் அனுப்பும் உறுப்பினர்கள் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும். 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.



25.05.2020 அன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் தகுதிப்பெற்ற உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம்: தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம், மற்ற நிர்வாகிகள் பதவிக்கு, ரூ. 50,000 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 10,000. இந்த தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்கிற முரளி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் டி.சிவா, தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
Tags:    

Similar News