சினிமா
கோமல் சர்மா

பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா

Published On 2020-03-17 18:17 IST   |   Update On 2020-03-17 18:17:00 IST
தமிழில் சட்டப்படி குற்றம், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆகிய படங்களில் நடித்த கோமல் சர்மா, தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, “இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது.



மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார். மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர். மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். 

மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார். இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்’ என்றார் கோமல் சர்மா.

Similar News