சினிமா
விசு - தனுஷ்

என்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு

Published On 2020-02-15 06:16 GMT   |   Update On 2020-02-15 06:16 GMT
என்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் என்று இயக்குனர் விசு கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்தது.

நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



நெற்றிக்கண் ரீமேக்கை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் பொய் என்றால் கண்டுகொள்ள மாட்டேன். உண்மையாக இருக்குமானால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.”

இவ்வாறு விசு கூறியுள்ளார்.
Tags:    

Similar News