சினிமா
விஜய்

வருமானவரித்துறை சம்மன் - நடிகர் விஜய் நாளை ஆஜர்

Published On 2020-02-10 05:40 GMT   |   Update On 2020-02-10 05:40 GMT
வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமார் ரூ.150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவன அலுவலகங்கள், விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருந்ததால் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனர். 



வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், அன்புசெழியன், கல்பாத்தி அகோரம் ஆகியோர் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வந்தது. இன்று காலை வெளியான தகவல்படி இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடலூர் என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது. இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால் நாளை ஆஜராவார் என தெரிகிறது.
Tags:    

Similar News