சினிமா
சனம் ஷெட்டி - தர்ஷன்

தர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார்

Published On 2020-02-05 10:00 IST   |   Update On 2020-02-05 10:00:00 IST
என்னுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய சனம் ஷெட்டி மீண்டும் அவர் மீது புகார் கூறியுள்ளார்.
நடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:-

“தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதையும் தவிர்த்தார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி உள்ளார். அதில் உண்மை இல்லை. எனது நடத்தையை மோசமாக சித்தரிக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்க கூடாது என்பதற்காகவே புகார் அளித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. 8 மாதமாக வாய் மூடி கெஞ்சினேன். தர்ஷனுக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறேன்.



நிச்சயதார்த்தத்துக்கு ரூ.5 லட்சம் செலவானது. ஐபோன் கேட்டார். வாங்கி கொடுத்தேன். அவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு எனக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்று காட்டுகிறேன் என்றார். எனக்கு துரோகம் செய்ததால் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். எனது எதிர்காலத்தை அழித்து குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு நீதி வேண்டும்.

இவ்வாறு சனம் ஷெட்டி கூறினார்.

Similar News