உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் ஆகியோரை வைத்து சைக்கோ படத்தை இயக்கி இருக்கும் மிஷ்கின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த மிஷ்கின்
பதிவு: ஜனவரி 30, 2020 16:04
இயக்குனர் மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. உதயநிதியின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை குவித்து வருகிறது என்கிறார்கள்.
இதில் உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் நடித்திருந்தார்கள். டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து இருந்தார். மிஷ்கின் உதவியாளர் ராஜ், சைக்கோவாக நடித்திருந்தார். இந்த படம் பற்றி கடுமையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து மிஷ்கின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சைக்கோ படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்தவர்கள் என்னை கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்கள். ஆனால் கடுமையான விமர்சனங்களும் வருகிறது. இவ்வளவு ரத்தம் தேவையா? வன்முறை தேவையான என்கிறார்கள். இது அப்படிப்பட்ட படம் தான் என்பதை முன்பே சொல்லிவிட்டேன். தணிக்கையில் ஏ சான்றிதழ் கேட்டு வாங்கினேன். குழந்தைகள், கர்ப்பிணிகள், இளகிய மனம் படைத்தவர்கள் படம் பார்க்க வராதீர்கள் என்று சொன்னேன். அடுத்து 24 கொலை செய்த சைக்கோவை மன்னிக்கலாமா என்று கேட்கிறார்கள்.
அவன் சைக்கோவாக மாறியதற்கு மதக் கோட்பாடுகளும், பள்ளி கட்டுப்பாடுகளும் தான் காரணம். அவனை மிருகமாக்கியது இவைகள் தான். அவன் ஏன் இப்படி ஆனான் என்பதை அதிதிராவ் உணர்கிறார். அதனால் அவரது பார்வையில் அவன் குழந்தையாக தெரிகிறான், மன்னிக்கிறார். இது எப்படி தவறாகும். இது மாதிரி படங்கள் சிவப்பு ரோஜாக்கள் காலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது. நான் எனது பாணியில் இந்த படத்தை தந்திருக்கிறேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.
Related Tags :