சினிமா
சரத்குமார்

நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம் இதுதான்- சரத்குமார்

Published On 2020-01-27 08:35 IST   |   Update On 2020-01-27 08:35:00 IST
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா இயக்கி இருக்கிறார். 

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரத்குமார் கூறியதாவது:- “சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. அண்மையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தேன். ‘வானம் கொட்டட்டும்‘ கதையை நானும், ராதிகாவும் கேட்டதும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றும் வெற்றி தோல்விகளை அவர்கள் எப்படி சந்திக்கின்றனர் என்பது கதை.



இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை பின்பற்றி வருகிறேன். இதுவே நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்.

ராதிகாவுக்கு கோபம் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி. எனக்கு ரஷ்ய மொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.” இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Similar News