சினிமா
பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத், கரன் ஜோகர், அத்னன் சமி, ஏக்தா கபூர்

பாலிவுட் பிரபலங்கள் கங்கனா ரணாவத், கரன் ஜோகர், அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது

Published On 2020-01-26 07:10 GMT   |   Update On 2020-01-26 07:10 GMT
பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரணாவத், கரன் ஜோகர், அத்னன் சமி மற்றும் ஏக்தா கபூர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 34 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 12 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள் கிடைத்து இருக்கின்றன.

திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாடகர்கள் சுரேஷ் வாட்கர், அத்னன் சமி, டி.வி. நடிகர் சரிதா ஜோஷி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். விருது குறித்து கங்கனா ரணாவத் கூறுகையில், என்னை அங்கீகரித்த தாய் நாட்டிற்கு நன்றி. தங்களது கனவுகளை எண்ணி பயத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும், ஒவ்வொரு மகளுக்கும், ஒவ்வொரு தாய்க்கும் மற்றும் நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் கனவுகளுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
Tags:    

Similar News