சினிமா
சிம்பு - என்.கே.கண்டி

சிம்பு பட இயக்குனரின் அடுத்த படைப்பு

Published On 2020-01-24 13:20 GMT   |   Update On 2020-01-24 13:20 GMT
நடிகர் சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் என்.கே.கண்டி அடுத்ததாக ‘டே நைட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.

டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.



படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் இப்படம் குறித்து கூறும்போது, ‘எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. அரசியல் பவரும் கிடையாது. 7 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். இயக்குனர் என்.கே.கண்டிக்கு மிகப்பெரிய திறமை உண்டு. சரியான ஹீரோ, பட்ஜெட் கிடைத்தால் இவர் மிகப்பெரிய இயக்குனர் வரிசையில் இருப்பார். வெறும் பத்து லட்சம் ரூபாயில் இவ்வளவு குவாலிட்டியாக படம் எடுத்த இயக்குனர் கண்டிக்கு நன்றி. இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் எங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறோம். முழுக்க முழுக்க சினிமா மேல் இருக்கிற காதல் காரணமாகத் தான் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தயாரித்து நடித்துள்ளேன்’ என்றார்.

அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.கே.கண்டி இயக்கியுள்ளார். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Tags:    

Similar News