சினிமா
தபாங் 3 படத்திற்கு டப்பிங் பேசிய நந்திதா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது டாணா, ஐ.பி.சி. 376 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் “தபாங் 3” படத்தில் சோனாக்ஷி சின்ஹாவிற்காக நந்திதா டப்பிங் பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் இவரே டப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது.