சினிமா
ரம்யா நம்பீசன்

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா நம்பீசன்

Published On 2019-12-17 12:57 IST   |   Update On 2019-12-17 12:57:00 IST
ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரம்யா நம்பீசன் திருமண புடவையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்தவர்கள் ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரப்பினர். பலர் சமூக வலைத்தளத்தில் திருமண வாழ்த்துகள் கூறினார்கள். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினர்.

இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று ரம்யா நம்பீசன் மறுத்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “உங்களுக்கு எப்போது திருமணம்? கல்யாணம் முடிந்து விட்டதா? என்றெல்லாம் நிறைய பேர் என்னிடம் விசாரித்த வண்ணம் உள்ளனர். 



நான் திருமண புடவை அணிந்து வெளியான புகைப்படம் பத்ரி வெங்கடேசன் இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பதற்காக எடுக்கப்பட்டது. எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகிவிட்டதாக நான் சொல்லவும் இல்லை.” இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார். இதன்மூலம் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Similar News