சினிமா
கே.ஜி.எப்., அவனே ஸ்ரீமன் நாராயணா பட போஸ்டர்கள்

கே.ஜி.எப் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் அவனே ஸ்ரீமன் நாராயணா

Published On 2019-12-01 13:54 IST   |   Update On 2019-12-01 13:57:00 IST
கே.ஜி.எப் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'அவனே ஸ்ரீமன் நாராயணா' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி, கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வசூல் குவித்து சாதனை படைத்தது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்தது. இந்த படம் கொடுத்த உத்வேகத்தில் தற்போது, ’அவனே ஸ்ரீமன் நாராயணா’ எனும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. 

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் 3 வருடமாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் அதிக பொருட்செலவில் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிட திட்டமிட்ட படக்குழு, கே.ஜி.எப் படத்திற்கு, பிற மொழிகளில் கிடைத்த வரவேற்பை பார்த்து, தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. 



ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சச்சின் ரவி இயக்கி, எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படத்தில், சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், நாகர்ஜுன் ஷர்மா, அபிலாஷ், அனிருத் காட்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் எச்.கே.பிரகாஷ் மற்றும் புஷ்கரா மல்லிகார்ஜுனா இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சரண் ராஜ் மற்றும் பி அஜனேஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த டிரைலரை தமிழில் - தனுஷ், தெலுங்கில் - நானி, மலையாளத்தில் - நிவின் பாலி போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டதோடு படக்குழுவையும் பாராட்டியுள்ளனர். இப்படம் டிசம்பர் இறுதியில் திரைக்கு வருகிறது.

Similar News