சினிமா
ஐசரி கணேஷ், எடப்பாடி பழனிசாமி

ஹாட்ரிக் ஹிட்..... வெற்றிவிழா கொண்டாடும் வேல்ஸ் நிறுவனம்- முதல்வர் பங்கேற்கிறார்

Published On 2019-11-23 09:40 GMT   |   Update On 2019-11-23 09:40 GMT
எல்.கே.ஜி., கோமாளி, பப்பி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் நிறுவனம், இதற்காக வெற்றிவிழா கொண்டாட உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக திகழ்பவர் டாக்டர். ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கே.கணேஷ் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் மகன் ஆவார். தந்தை வழியில் சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே தந்தையின் நிறுவனம் சார்பில் 2 படங்களை தயாரித்துள்ளார். பின்னர் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எல்.கே.ஜி. படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இந்த படத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். அரசியல் கதையம்சம் கொண்ட எல்.கே.ஜி. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவிந்தது. அதன்பிறகு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வசூல் குவித்து வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து வருண் கதாநாயகனாக நடித்த பப்பி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வெற்றி பெற்றது.

இந்த 3 படங்களின் வெற்றி விழாவையும், அவற்றில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியையும் வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் பட நிறுவனம் நடத்த உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை (24-ந்தேதி) மாலை 6 மணிக்கு இந்த விழா நடக்க உள்ளது.



இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 3 படங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை தொடர்பான விழா என்பதால் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து வேல்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது:- எல்.கே.ஜி. படத்தில் தமிழ் நாட்டின் முக்கிய அடையாளங்களை காட்டி ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெற்றது. அந்த பாடல் இங்கே முதல் நிகழ்வாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. அடுத்து வேல்ஸ் பிலிம் இண்டெர்னே‌ஷனல் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரடியூசர் அஷ்வின் வரவேற்புரை ஆற்றுகிறார்.

இதில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிறுவனம் அடுத்தடுத்து 3 வெற்றி படங்களை கொடுத்தது பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட உள்ளது. பின்னர் நடன இயக்குனர் ஸ்ரீதரின் நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. முதல் அமைச்சர், அமைச்சர்கள், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.

இதையடுத்து ஐசரி கணேஷ் முதல்-அமைச்சருக்கு மரியாதை செய்து வரவேற்கிறார். அத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி பயணம் பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பப்பட இருக்கிறது. பின்னர் வெற்றி பெற்ற 3 படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் சிறப்பு விருதுகளை வழங்குகிறார்.

அதன் பின்னர் ஐசரி கணேஷ் முதல்-அமைச்சரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் திரைப்பட துறைக்கு பெரும் ஆதரவாக இருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கவுரவிக்கப்பட உள்ளார்.

அடுத்து முன்னணி இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம், இசையமைப்பாளரும் இயக்குனருமான டர்புகா சிவா மூவரும் இணைந்து 30 நிமிடங்களுக்கு இசை கச்சேரி நடத்த உள்ளனர். இறுதியாக வேல்ஸ் இண்டெர்னே‌ஷனல் நிறுவன தயாரிப்பில் அடுத்து வர இருக்கும் படங்களான எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, சுமோ, ஜோஷ் வா, மூக்குத்தி அம்மன் ஆகிய 5 படங்களில் இருந்து சிறப்பு காட்சிகள், வீடியோக்கள், போஸ்டர்கள் வெளியிடப்பட உள்ளன.

குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு கவுதம் மேனன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகி இருக்கும் ஜோஷ்வா படத்தில் இருந்து எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள் ஒளிபரப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விவேக், வடிவேலு, ஆர்ஜே.பாலாஜி, காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, இமான் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள், பழம்பெரும் நடிகர்-நடிகைகள் உள்பட 100-க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்-அமைச்சருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு வேல்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News