சினிமா
லட்சுமி அகர்வால் - சந்தோஷி

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி

Published On 2019-11-18 11:41 GMT   |   Update On 2019-11-18 11:41 GMT
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணுக்கு நடிகை சந்தோஷி மேக்கப் போட்டு செமினார் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.
தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

இவர் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தினார். இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 

இதில் சந்தோஷி பேசும்போது, “கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன். சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன். 



இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறிய நாள் இன்றுதான். இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான். இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார். 

இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News