சினிமா
மணிரத்னம், ரேவதி

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

Published On 2019-10-10 02:02 GMT   |   Update On 2019-10-10 02:02 GMT
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.



இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர். இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News