நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் உருவான லவ் ஆக்ஷன் டிராமா திரைப்படம் தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த லவ் ஆக்ஷன் டிராமா
பதிவு: செப்டம்பர் 11, 2019 17:12
நிவின்பாலி - நயன்தாரா
தமிழ் சினிமா ரசிகர்களை மலையாள திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் ’பிரேமம்’. நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் மலையாள இயக்குனர்கள் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘லவ் ஆக்ஷன் டிராமா’.
நிவின் பாலி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அஜு வர்கீஸ், தன்யா, பிரஜன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.
களவாணி விமல், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா போல் ஊதாரித்தனமாக சுற்றும் நிவின் பாலிக்கு தனது மாமா மகள் மீது ஆசை. சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும் என கூறி நிவின் பாலிக்கு தனது மகளை திருமணம் செய்துவைக்க மறுக்கிறார் அவரது மாமா. இதையடுத்து தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார் நிவின் பாலியின் மாமா. இதனால் மணமுடையும் நிவின் பாலி தனது குடிகார நண்பனுடன் சேர்ந்து மது பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
நிவின் பாலி மாமா மகளின் நெருங்கிய தோழி தான் நயன்தாரா. தோழியின் கல்யாணத்திற்காக கேரளா வரும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் நிவின் பாலி, நயனுக்கும் நிவின்பாலி மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது. திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா சென்னைக்கு செல்கிறார். அவரை காண நிவின் பாலியும் சென்னைக்கு வருகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். குடி, புகையை நிறுத்தினால் கல்யாணத்துக்கு ஓகே என கண்டிசன் போடுகிறார் நயன்தாரா. இந்த கண்டிசனை ஓகே செய்து நயன்தாராவை கரம் பிடிக்க நிவின் பாலி நடத்தும் டிராமா தான் இந்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’.