சினிமா
ஜெயம் ரவி

ரஜினி குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்- ஜெயம் ரவி

Published On 2019-08-06 04:33 GMT   |   Update On 2019-08-06 04:33 GMT
ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அவரது நண்பர் யோகிபாபு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி சொல்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார்.

இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார். 



இதுகுறித்து படத்தின் நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, ”நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முன்னோட்டத்துக்கு  மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருப்பினும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.  

அவர் ‘கோமாளி’ பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டினார். எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான  உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து, அக்காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News