சினிமா

சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்

Published On 2019-06-26 12:24 IST   |   Update On 2019-06-26 12:24:00 IST
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது தி லயன் கிங் படத்தின் மூலம் சிங்கத்திற்கு குரல் கொடுக்க இருக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. 

அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது. லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார். 



"லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.

டிஸ்னியின் தி லயன் கிங் வரும் ஜூலை 19 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Similar News