சினிமா

தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் வழக்கு

Published On 2019-04-29 12:35 GMT   |   Update On 2019-04-29 12:35 GMT
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனிஅதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Vishal
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வருகின்றனர். இவர்களது பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘தற்போது பதவி வகித்து வருபவர்களின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை தாக்கல் செய்து, அவற்றுக்கு ஒப்புதல் பெற வருகிற மே 1-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் தேதி தீர்மானிக்கப்படும்.

இந்த சூழ்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை, பதிவுத்துறை இணைந்து மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக எங்கள் சங்கத்துக்கு நியமித்துள்ளது.



தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவிடம் நடிகர் விஷால் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.
Tags:    

Similar News