சினிமா

அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு - முருகதாஸ் வழக்கில் ஐகோர்ட்டு கருத்து

Published On 2018-12-14 11:16 GMT   |   Update On 2018-12-14 11:16 GMT
அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்று முருகதாஸ் வழக்கில் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. #Sarkar #ARMurugadoss
சர்க்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார், அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி:-சர்கார் படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எப்படி செயல்பட முடியும்? ஏன் செயல்படுகிறீர்கள்?

ஏ.நடராஜன்:-அரசு வழங்கும் இலவச பொருட் களை எரிக்கும் காட்சியில் படத்தின் இயக்குனர் முருகதாசே நடித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

நீதிபதி:-இதில் என்ன உள்நோக்கம் உள்ளது. ஒரு திரைப்படம் என்றால், அதை திரைப்படமாகவே பார்க்க வேண்டும். ஒருவேளை படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் ஏதாவது இடம் பெற்றிருந்தால், அந்த காட்சிகளை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?



கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்த நிலையில், தனி நபர் கொடுத்த புகாரின் பேரில் ‘மதம், இனம், மொழி சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டியதாக இயக்குனர் முருகதாஸ் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?

அரசின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாதா? அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எதுவும் எடுக்கக்கூடாது என்று இயக்குனரிடம் உத்தரவாதம் கேட்பது என்பது, அவரை அரசு மிரட்டுவதற்கு சமம்.

இவ்வாறு வாதம் நடந்தது.
Tags:    

Similar News