சினிமா

பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி

Published On 2018-09-27 10:48 GMT   |   Update On 2018-09-27 10:48 GMT
கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் நாளை ரிலீசாகவிருக்கும் நிலையில், பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் தான் என்று நடிகர் கதிர் கூறினார். #Kathir #PariyerumPerumal
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார் கதிர். அவர் அளித்த பேட்டி...

‘பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக மாரி செல்வராஜிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது புதிதாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது. திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. கடும் வெயிலில் பொட்டல்வெளி என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பரவாயில்லை என உட்கார்ந்து விடுவேன்.



படத்தில் கருப்பி என்ற நாய்க்கு அதிக முக்கியத்துவம் போல?

ஆமாம், அதன் நிஜப்பெயரே கருப்பி தான். இயக்குனரின் அண்ணன் வீட்டு நாய். அது நம் நாட்டு இனத்தை சேர்ந்த வேட்டை நாய்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில் அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக் கொண்டதால் தான் நடக்கவே முடிந்தது.



சிகை, சத்ரு என்று நீங்கள் கஷ்டப்பட்டு நடிக்கும் படங்கள் கூட ரிலீசில் பிரச்சினைகளை சந்திக்கின்றன. இது வருத்தம் இல்லையா?

சினிமாவில் பின்புலம் மிக அவசியம். நான் எந்த பின்புலமும் இல்லாமல் கோவையில் இருந்து வந்தவன். என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும், படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான். ஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம். ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

சினிமாவில் உங்கள் பாதை விஜய்யா? விக்ரமா?

விஜய்சேதுபதி பாதை. #Kathir #PariyerumPerumal

Tags:    

Similar News