சினிமா

சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக வழக்கு- ஆர்யா, இயக்குநர் பாலா நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு

Published On 2018-06-21 17:06 IST   |   Update On 2018-06-21 17:06:00 IST
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா, பாலா நாளை நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Arya #Bala
பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, விஷால் இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜூன் மாதம் 20-ந்தேதி நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அம்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று அம்பை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யா, பாலா, மற்றும் சினிமா நிறுவனத்தை சேர்ந்த ரங்கராஜன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்தார்.

அப்போது, 3 பேரிடமும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளிவைப்பதாக நீதிபதி முரளிதரன் அறிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். மேலும், இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றி நடிகர் விஷால் பேசாததால் அவர் மீது வழக்கு தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நாளை மீண்டும் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்ட 3 பேரும் ஆஜராவார்கள் என தெரிகிறது. #Arya #Bala

Tags:    

Similar News