சினிமா

காரில் நம்பர் பிளேட் திடீர் மாயம்: பகத் பாசிலிடம் விசாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் முடிவு

Published On 2017-11-02 12:25 GMT   |   Update On 2017-11-02 12:25 GMT
பகத்பாசிலின் காரின் நம்பர் பிளேட் மாயமானது பற்றி போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர்-நடிகைகள் சொகுசு கார்களை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து அதை கேரளாவுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் கேரள அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

முதலில் நடிகை அமலா பால் மீது தான் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டது. புதுச்சேரியில் காரை பதிவு செய்ததன் மூலம் அவர் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேப்போல மலையாள நடிகரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியும் புதுச்சேரியில் பதிவு செய்து சொகுசு காரை கேரளாவில் பயன்படுத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் எந்த விளக்கமும் அளிக்க வில்லை.

இந்த நிலையில் மலையாள இளம் நடிகரான பகத்பாசிலும் இதேப்போல கார் மோசடியில் அடுத்து சிக்கினார். இது போன்ற வெளி மாநிலத்தில் காரை பதிவு செய்து அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக கேரள போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொச்சி திருப்புணித்துறா என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாகனம் நிறுத்தும் இடத்தில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு சொகுசு கார் நடிகர் பகத்பாசிலுக்கு சொந்தமானது என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதே சமயம் அந்த காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகத்பாசிலின் காரின் நம்பர் பிளேட் மாயமானது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் பகத்பாசிலிடமும் விசாரணை நடத்த அவர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கேரள சினிமா பிரபலங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News