சினிமா

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு

Published On 2016-10-30 08:45 IST   |   Update On 2016-10-30 08:45:00 IST
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். போயஸ் கார்டன் வீட்டில் அவர் ரசிகர்களை சந்தித்தார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தை தொடர்ந்து, சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து கொண்டு இருந்தார். சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. கபாலி படத்திலும், 2.0 படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததால், அவர் சோர்வாக காணப்பட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், அமெரிக்கா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அங்கு தங்கியிருந்து சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

ரஜினிகாந்த் சென்னை திரும்பியதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க போயஸ் கார்டன் வீட்டின் முன்பு திரண்டனர்.

இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்கள் மத்தியில் காட்சியளித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ரசிகர்களுடன் 10 நிமிடம் நேரத்தை கழித்த ரஜினிகாந்த் பின்னர் வீட்டிற்குள் சென்றார்.

Similar News