சினிமா
சிந்து பைரவி

சிந்து பைரவி ஒரு காவியம் - 3 தேசிய விருதுகளை பெற்றது

Published On 2021-05-08 23:00 GMT   |   Update On 2021-05-08 23:00 GMT
பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

1982-ல், "அக்னி சாட்சி'' என்ற படத்தை பாலசந்தர் தயாரித்தார். கதை -வசனம் -டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். படம் சிறப்பாக அமைந்தும் சரியாக ஓடவில்லை.

பின்னர் "அச்சமில்லை அச்சமில்லை'', "கல்யாண அகதிகள்'' ஆகிய படங்களை தயாரித்தார். அவள் ஒரு தொடர்கதை, இருகோடுகள் ஆகிய படங்களை கன்னடத்திலும், "வறுமையின் நிறம் சிவப்பு'', "அபூர்வ ராகங்கள்'' ஆகிய படங்களை இந்தியிலும் எடுத்தார்.

1985-ல் அவர் கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்த "சிந்து பைரவி'' மகத்தான படமாக அமைந்தது.

இதில் சிவகுமார், சுகாசினி, சுலக்ஷனா ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாவற்றிலும் சிறந்த படமாக "சிந்து பைரவி'' அமைந்தது.

இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

(1) சிறந்த நடிகை -சுகாசினி.

(2) சிறந்த இசை அமைப்பாளர் -இளையராஜா.

(3) சிறந்த பின்னணி பாடகி -சித்ரா. (பாடறியேன்... படிப்பறியேன்...'' பாட்டுக்காக.)

சிறந்த நடிகை விருது பெற்ற சுகாசினி இதற்கு முன் பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தரின் படத்தில் நடிப்பது அதுவே முதல் படம். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைக்கக்கூடிய அளவுக்கு நடிக்க வைத்த பெருமை, பாலசந்தரையே சாரும்.

சிந்து பைரவியின் வெற்றி பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

"சிந்து பைரவி படத்தை தொடக்கத்தில் பார்த்த யாருமே இது இவ்வளவு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

விருது வாங்கும் அளவுக்கு இந்தப்படத்தை நான் கணிக்கவில்லை என்றாலும், "சிந்து'' என்ற கேரக்டரை நான் உருவாக்கியபோதே, இந்தப் பாத்திரம் ஏதோ பெரிதாக பண்ணப்போகிறது என்பது, என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.

சில நேரங்களில் எனக்கு கேரக்டர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனைத் தரும். சில நேரங்களில் என் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எதிர்பாராமல் இன்ஸ்பிரேஷன் தருவார்கள். அந்த வகையில் சிந்துவாக நடித்த சுகாசினி, அந்த இன்ஸ்பிரேஷனை ஓரளவு அதிகமாகவே தந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையைத் தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

நடிகை சுகாசினி கூறியதாவது:-

"தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினால், என்னையே நான் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும். இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு விருது நிச்சயமாய் கிடைக்கும் என்று என் உள் மனம் கூறிக்கொண்டே இருந்தது.

நான் இந்த விருதைப் பெறுவதற்கு முக்கிய காரணம் பாலசந்தர்தான்.

முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொன்னபோது, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு காட்சியையும் அவரே நடித்துக்காட்டி விளக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருந்ததால், நமக்கு அதிக சிரமம் இருக்காது என்று எண்ணி ஒப்புக்கொண்டேன்.

அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெரிதுமë மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப்பெண்ணான நான், ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இந்த பரிசைப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன்.''

இவ்வாறு சுகாசினி கூறினார்.

"சிந்து பைரவி'' கதாநாயகன் சிவகுமார் கூறியிருப்பதாவது:-

"கிட்டத்தட்ட 200 படங்கள் செய்து விட்ட எனக்கு, அகில உலகிலும் கவுரவத்தைப் பெற்று தந்த படம் "சிந்து பைரவி.''

இசையில் ஒருத்தி மயக்குகிறாள். இல்லறத்தில் ஒருத்தி மயக்குகிறாள். நடுவிலே, "ஜே.கே.பி.'' என்றொரு அற்புதமான பாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், பாலசந்தர்.

இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின.

பாலசந்தர் அவர்களின் படங்களில் நடிப்பது என்பது சுகானுபவம். காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.

கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.''

இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
Tags:    

Similar News