சினிமா
கோப்புப்படம்

என் படங்களுக்கு இனி வாலி தான் பாட்டு எழுதுவார் - எம்.ஜி.ஆர். அறிவிப்பு

Published On 2021-03-04 21:06 GMT   |   Update On 2021-03-04 21:06 GMT
"இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.
"என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

"இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

"சாரதா'' படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

"எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

"ரொம்ப நன்றி சார்!'' என்றார் வாலி.

"எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்'' என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

"உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்'' என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ'' என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

"ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

"அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா'' என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்'' படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

"வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு `டைட்டில் சொல்லுங்க!'' என்றார், வேலுமணி.

உடனே "படகோட்டி'' என்று சொன்னார், வாலி.

"பிரமாதம்'' என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

"படகோட்டி''க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

"படகோட்டி'' படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்'' என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

"அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

`படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் நான் கடுமையான ஜ×ரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

"அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல...'' என்று வாதாடினார்.

ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

"அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்'' என்பதே அந்தப்பாடல்.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News