சினிமா
கோப்புப்படம்

வெற்றிக்கு காரணம் யார்? மனம் திறந்து கூறுகிறார் பாலசந்தர்

Published On 2021-02-15 20:45 GMT   |   Update On 2021-02-15 20:45 GMT
என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-

"ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.

எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.

பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், "பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்'' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.

எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.

இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.

அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.

குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.

கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், "பிடிக்கவில்லை''தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.

அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் "அவளாகவே இருக்கிறாள்.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

"எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.

என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.

அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.

முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?

முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.

பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.

அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.

புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.

ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.

எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.

இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார்
Tags:    

Similar News