சினிமா

இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? இளையராஜா வெளியிடும் தகவல்கள்

Published On 2019-02-28 17:43 GMT   |   Update On 2019-02-28 17:43 GMT
சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.

இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

"என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.

சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.

இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.

கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.

இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.

ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.

"அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.

காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.

மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.

நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.

இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.

பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.

"என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,

"டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது

பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.

பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.

சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.

ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.

`ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.

இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.

பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக

இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.

இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.

ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.

பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.

அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.

அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.

ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.

சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.

பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.

பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.

பாஸ்கரும் விடுவதாக இல்லை.

"இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''

பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி  அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.

Tags:    

Similar News