சினிமா

புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார் பாரதிராஜா - இளையராஜா தகவல்கள்

Published On 2016-11-03 22:14 IST   |   Update On 2016-11-03 22:14:00 IST
நடிகராக விரும்பிய பாரதி ராஜாவுக்கு, திடீரென்று டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது. பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார்.
நடிகராக விரும்பிய பாரதி ராஜாவுக்கு, திடீரென்று டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது. பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார்.

அல்லி நகரத்தைச் சேர்ந்தவரான பாரதிராஜா, இளையராஜாவின் ஊரான பண்ணைபுரத்துக்கு மலேரியா தடுப்பு அதிகாரியாக வந்தபோது, நண்பர்கள் ஆனார்கள்.

பாரதிராஜாவுக்கும் சினிமா கனவு உண்டு. டைரக்டர் ஆக வேண்டும்  என்றல்ல; நடிகர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை!

சிவாஜி கணேசனின் நடிப்பை அணு அணுவாக ரசித்த பாரதிராஜா, சிவாஜி போலவே பெரிய நடிகராக வேண்டும் என்று விரும்பினார்.

இதன் காரணமாக வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார்.

சென்னையில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் மவுண்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலை) உள்ள `பயோனியர் மெட்ராஸ்' என்ற மோட்டார் கம்பெனியில் நண்பர் ஒருவர் முயற்சியால் வேலைக்கு சேர்ந்தார். பாரதிராஜா, இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் மூவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தனர்.

பாரதிராஜாவுக்கு அப்போது சம்பளம் 120 ரூபாய். அதில் 30 ரூபாய் ரூம் வாடகை. மீதி இருந்த 90 ரூபாயில் சாப்பாடு, பஸ், சினிமா, சிகரெட் செலவுகள்!

இந்த சமயத்தில், பாரதிராஜாவுக்கு நடிப்பின் மீதான மோகம் குறைந்து, டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நாள், ஜெய்சங்கர் படத்தை போஸ்டரில் பார்த்து விட்டு, அறைக்கு திரும்பிய பாரதிராஜா, கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார். பிறகு, பாஸ்கரைப் பார்த்து, "டேய்! இந்த ஜெய்க்கு கண்ணே சரி இல்லையே! அவர் எல்லாம் நடிக்கும்போது நான் ஏன் நடிக்கக்கூடாது?'' என்று கேட்டார்.

"நடிக்கக்கூடாது என்று யார் சொன்னது? உனக்கு மூக்கு கொஞ்சம் பெரிசு! நடிப்பிலே பேர் வந்துட்டா ஜனங்கள் ஒத்துக்குவாங்க! ஜெய்யை ஒத்துக்கிட்டவங்க, உன்னை ஒத்துக்க மாட் டாங்களா!'' என்று ஐஸ் வைத்துப் பேசினார், பாஸ்கர்.

இதற்குப் பிறகு, புட்டண்ணா கனகல் எடுத்த "சரபஞ்சரா'' என்ற கன்னடப் படத்தை ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது ஷாப்பிங் சென்டர்) பார்த்த பாரதிராஜா, அப்படியே பிரமித்துப் போய்விட்டார். டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு வித்தூன்றிய படம் இதுதான்.

"ஆகா! புட்டண்ணா, எப்படி படம் எடுத்திருக்கிறார்! உதவி டைரக்டரா சேர்ந்தா இவரிடம்தான் சேர வேண்டும்'' என்று கூறியபடி

இருந்தார்.இதற்குப் பின் என்ன நடந்தது என்பது பற்றி இளையராஜா கூறியதாவது:-

"டைரக்டராக வேண்டும் என்ற நோக்கத்திற்கு பாரதிராஜா மாறிவிட்டார் என்று தெரிந்தது. யாராவது பாரதிராஜாவை புட்டண்ணாவிடம் சேர்த்து விட மாட்டார்களா என்று நினைத்தேன்.

ஒரு நாள் ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்துக் கொண்டிருந்தபோது, `சரபஞ்சரா' படம் பற்றி பேச்சு வந்தது. புட்டண்ணாவை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

"அவன் யாரு தெரியுமா? நம்ம பையன்!'' என்றார், ஜி.கே.வி.

ஜி.கே.வி.யுடன் பாஸ்கருக்கு அறிமுகம் உண்டு. அவர் மூலமாக ஜி.கே.வி.யிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

விஷயத்தை பாஸ்கரிடம் சொன்னேன். அவரும், "சரி; முயற்சிப்போம்'' என்றார்.

ஒரு நாள் நானும், பாஸ்கரும் ஜி.கே.வி.யிடம் போனோம். "என்ன விஷயம் பாஸ்கர்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

"எங்க பாரதிராஜாவுக்கு புட்டண்ணா கிட்டே அசிஸ்டென்டாக வேலை பார்க்க ஆசை. நீங்க அவரிடம் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்ண்ணே!'' என்றார், பாஸ்கர்.

"அது யாருடா பாரதி?'' என்று ஜி.கே.வி. கேட்க, "எங்க சித்தப்பா பையன்! அண்ணன் முறை வேண்டும்! என்று கூறி சமாளித்தோம்.

"சரி. நாளை காலை அவனை கூட்டிக் கொண்டு வா!'' என்று பாஸ்கரைப் பார்த்துச் சொன்னார், ஜி.கே.வி.

மறுநாள் பாஸ்கரும், பாரதிராஜாவும் ஜி.கே.வி.யிடம் போனார்கள். "ஒரு டாக்சி பிடித்து வா!'' என்று ஜி.கே.வி. சொல்ல, பாஸ்கர் ஒரு டாக்சியை கொண்டு வந்தார். மூவரும் டாக்சியில் புறப்பட்டனர்.

மந்தைவெளி பஸ் ஸ்டாண்டு அருகே, டாக்சியை ஜி.கே.வி. நிறுத்த சொன்னார். "ஒரு மாலை வாங்கிக் கொண்டு வா!''

என்றார்.பாரதிராஜாவும், பாஸ்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என்ன, காசில்லையா?'' என்று கேட்ட ஜி.கே.வி. அவரே பணம் கொடுத்து மாலை வாங்கினார். ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனிக்கு சென்ற டாக்சி, புட்டண்ணா வீட்டு முன் போய் நின்றது.

பாஸ்கர், பாரதிராஜா இருவரையும் அழைத்துக் கொண்டு, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளே சென்றார்.

ஹாலில் புட்டண்ணா உட்கார்ந்திருந்தார். ஜி.கே.வி.யை பார்த்ததும், "இது ஏனு குருக்களே! நீவே ஏளி இருபருதல்லா, நானே நிம்மள்ள காணு பேக்கு எந்தித்தேனு'' (`இது என்ன குருவே! நீங்களே சொல்லியிருந்தா, நானே வந்திருப்பேனே! நானே உங்களைப் பார்க்க வேண்டும் என்று இருந்தேன்') என்றார்.

உடனே ஜி.கே.வி, "டேய் பாரதி! மாலையைப் போட்டு நமஸ்காரம் பண்ணிக்கோ'' என்றார்.

பாரதிராஜா, புட்டண்ணாவுக்கு மாலை அணிவித்து விட்டு, காலைத் தொட்டு வணங்கினார். "அடடா! இதெல்லாம் எதுக்கு?'' என்றார், புட்டண்ணா.

"இருக்கட்டும், இருக்கட்டும்! இவன் நமக்குத் தெரிந்த பையன். ரொம்ப நல்லவன். நீ டைரக்ட் செய்த படத்தைப் பார்த்து விட்டு, உன் மேலே பைத்தியமாகி விட்டான். உன்கிட்டே அசிஸ்டென்டா சேர ஆசைப்படுகிறான்'' என்றார், ஜி.கே.வி.

"சரி! குருக்களே! நீங்க சொல்லிட்ட பிறகு வேறு என்ன!'' என்று கூறிய புட்டண்ணா, பாரதிராஜாவை நோக்கித் திரும்பி, "நாளைக்கு ஜெமினி ஸ்டூடியோவுக்கு வந்துடு!'' என்றார்.

நாங்கள் திரும்பி வரும்போது, "புட்டண்ணா உங்களிடம் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரே. என்ன காரணம்?'' என்று ஜி.கே.வி.யிடம் பாரதிராஜா கேட்டார்.

"ஜுபிடர் ஸ்டூடியோவிலும், சி.ஆர்.சுப்பராமனிடமும், எஸ்.வி.வெங்கட்ராமனிடமும் வீணை வாசித்த பின், எம்.எஸ்.வி.யிடம் நான் இசை கண்டக்ட் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், எம்.எஸ்.வி.யிடம் தபலா வாசிக்கும் கோபால கிருஷ்ணனும், நானும் ஒரு ரூமில் தங்கியிருந்தோம். எங்களுக்கு சமையலுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. கர்நாடகாவில் இருந்து ஒருவர் வந்தார். அவர் நன்றாக கவிதை எழுதக்கூடியவர். எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சமைத்து வைப்பார். அவர்தான் பிரபாகர் சாஸ்திரி. பிற்காலத்தில், கன்னடப் படவுலகின் தலைசிறந்த பாடல் ஆசிரியர் ஆனார். அவர் தம்பிதான் புட்டண்ணா'' என்று ஒரு பெரிய சரித்திரத்தை நான்கு வாக்கியங்களில் அடக்கிச் சொன்னார், ஜி.கே.வி.

ஒரு பெரிய ஆலமரத்தில், எங்கிருந்தோ பறவைகள் வந்து, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாக தங்கி மகிழ்ந்திருந்து, வாழ்ந்திருந்து போவது போல், எங்கெங்கிருந்தோ வருகிற கலைஞர்கள் சினிமாவாம் ஆலமரத்தில் தங்கியிருந்து வாழ்ந்ததும் அல்லாமல் விழுதுகளால் வேரோடி இருக்கிறார்களே! நினைக்கவே அதிசயமாக இருந்தது.

புட்டண்ணா கூறியபடி, மறுநாள் ஜெமினி ஸ்டூடியோவுக்கு பாரதிராஜா போனார், அசிஸ்டென்ட் டைரக்டராகி விட்டார்.

நேரம் வந்துவிட்டால், நடக்க வேண்டியது தானாக நடக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்''

இவ்வாறு இளையராஜா கூறினார்.

Similar News