சினிமா

பாரதிராஜா படங்களில் சத்யராஜ்: கடலோரக் கவிதைகள் மூலம் கதாநாயகன் ஆனார்

Published On 2016-08-10 16:24 GMT   |   Update On 2016-08-10 16:24 GMT
வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜுக்கு பாரதிராஜாவின் "முதல் மரியாதை'' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் சிறுவேடத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, அடுத்து தான் இயக்கிய "கடலோரக் கவிதைகள்'' படத்தில், அவரை கதாநாயகன் ஆக்கினார்.
வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜுக்கு பாரதிராஜாவின் "முதல் மரியாதை'' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் சிறுவேடத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, அடுத்து தான் இயக்கிய "கடலோரக் கவிதைகள்'' படத்தில், அவரை கதாநாயகன் ஆக்கினார்.

பாரதிராஜா படங்களில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-

"நான் வில்லன் நடிப்பில் வளர்ந்த நேரத்திலும், டைரக்டர் பாரதிராஜாவின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரை போய்ப் பார்த்து சான்ஸ் கேட்டு வருவேன்.

அவரது முதல் படம் "16 வயதினிலே'' பிரமாண்டமான வெற்றி பெற்றது. இரண்டாவது படமாக "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் புதுமுகங்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கிறார் என்று தெரிந்ததும் நானும் நண்பர் ராஜ்மதனும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு ஓடினோம்.

அங்கே போனால், திருவிழா கூட்டம் போல புதுமுகங்கள் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்தபோது முதல் ரவுண்டிலேயே எங்களை துரத்தி விட்டார்கள்.

அதன் பிறகு நானும் பட வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினேன். "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படத்துக்கு அலுவலக நிர்வாக பொறுப்பிலும் இருந்தேன் அல்லவா? அப்போதெல்லாம் செட்டில் என் பார்வையில் டைரக்டர் பாரதிராஜா படுவார். இவர் படத்தில் நமக்கு எங்கே சான்ஸ் தரப்போகிறார் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து விட்டதால், கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி சாரை முதன் முதலாக பாரதிராஜா "முதல் மரியாதை'' என்ற படத்தில் இயக்கினார். படம் பற்றி திரையுலகமே பேசிக்கொண்டிருந்தது. திடீரென்று படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்னை அழைத்து, "படத்தில் ஒரு வில்லன் வேடம் இருக்கிறது. செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.

படத்தின் திருப்புமுனைக்கு காரணமான காட்சியில் நான் நடித்தேன். ஊர்ப் பெரியவரை உளமாற நேசிக்கும் குயிலு (நடிகை ராதா) நான் அந்த ஊர்ப் பெரியவரின் மனைவியின் முன்னாள் காதலன் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனால் ஒரு கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு தனது பழைய காதலியை பார்க்க அந்த கிராமத்துக்கு வரும் என்னை அவர் கொன்று விடுவார்.

படத்தில் ராதா, பரிசல் ஓட்டும் பெண். நான் அந்த பரிசலில் ஊருக்கு வரும்போது இந்த சம்பவம் நடக்க வேண்டும்.

காட்சியை என்னிடம் விவரித்த டைரக்டர் பாரதிராஜா, தனது உதவியாளரிடம் எனக்கான வசனங்களை ஒரு முறை படித்துக் காட்டச் சொன்னார். வசனத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நேராக பரிசலில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். காட்சி தொடங்குவதற்கு முன்பு பாரதிராஜா தனது உதவியாளர்களிடம், "என்னய்யா இது! வசனத்தை படிச்சுக் காட்டினதுமே நடிக்கப் போயிட்டான்!'' என்று கூறியிருக்கிறார்.

எவ்வளவு நீள வசனமானாலும் அதை ஒரு தடவை கேட்டு விட்டால் எனக்கு மறக்காது. அப்போதே அந்த காட்சிக்குத் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்து விடுவேன்.

இந்தப் படத்திலும் அதுதான் நடந்தது. என் கேரக்டரின் அடாவடித் தன்மைக்கேற்ப, சொந்தமாய் கொஞ்சம் வசனங்களையும் சேர்த்துக்கொண்டு பேசினேன்.

முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே. ஆயிற்று. டைரக்டர் பாரதிராஜாவுக்கு அப்படியொரு சந்தோஷம்! `என் மனசில் இருந்த அந்த வில்லனை அப்படியே பிலிமுக்குள் கொண்டு வந்துட்டீங்க' என்று பாராட்டினார். அதோடு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கொடுத்தார்.

இத்தனைக்கும், அந்தப்படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்றே மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டன! என்னைப் பாராட்டியவரிடம், அவரது படத்தில் நடிக்க எடுத்த முந்தைய முயற்சிகள் பற்றி சொன்னேன். ஆச்சரியப்பட்டவர், "நான்கூட உங்களை செட்டில் பார்த்திருக்கிறேன். வாட்டசாட்டமா, உயரமா இருந்ததால், ஸ்டண்ட் ஆளுன்னு நினைத்துக் கொள்வேன். அப்புறமாய் கையில் ஒரு பெட்டியோடு அடிக்கடி பார்த்திருக்கிறேன். படக்கம்பெனியில் வேலை பார்க்கிறவர் போலிருக்குது'' என்று நினைத்து விட்டேன்'' என்றார்.

நான் படக்கம்பெனியில் அலுவலக நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தபோது, என் கையிலிருந்த பெட்டி, என்னை அவருக்கு ஒரு `நடிகனாக' காட்ட தடையாக இருந்திருக்கிறது! இதை அவரிடம் சொன்னபோது மனம்விட்டுச் சிரித்தார்.

அப்போது நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளைக்கு 3 படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். படங்களில் கதாநாயகியை நான் `ரேப்' பண்ணுகிற மாதிரி காட்சிகளில் நடித்தால்கூட அதில் என் நடிப்புக்கு ரசிகர்கள் கைதட்டினார்கள்.

இப்படித்தான் ஒரு படத்தில், கதாநாயகியை `எசகுபிசகாக' மடக்கும் காட்சியில் நடித்ததற்கு ரசிகர்களிடம் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஒருநாள், என் நண்பர் `நிழல்கள்' ரவி எனக்கு போன் பண்ணி, நான் வில்லனாக நடித்த படம் நடக்கும் குறிப்பிட்ட தியேட்டருக்கு வரச்சொன்னார். அப்போது, படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தில் கதாநாயகியை நான் `ரேப்' செய்ய முயற்சிக்கிற காட்சி! கதாநாயகிக்கு ஆபத்து என்றால் கதாநாயகன் வந்து காப்பாற்றுவார் அல்லவா! அதன்படி படத்தின் ஹீரோ கண்ணாடி ஜன்னலை உடைத்தபடி அறைக்குள் பாய்கிறார். கீழே விழுந்து எழுந்த அதே வேகத்தில் ஹீரோ என் தோள் மீது கை வைக்கிறார்.

இந்த நேரத்தில் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஹீரோ வந்து விட்டதால் இனி ஹீரோயினுக்கு ஆபத்து இல்லை என்பதாக ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் தோளில் கைவைத்த ஹீரோவை "எடுடா கையை'' என்று கத்தினார்கள். நான் வெலவெலத்துப் போய்விட்டேன். வில்லனின் மேனரிசங்களை ரசிக்கிற அளவுக்கு ரசிகர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள், அல்லது மாறிப்போய்இருக்கிறார்கள் என்பது எனக்கே அந்த நேரத்தில் அதிசயமாகத் தெரிந்தது!

என்னை தியேட்டருக்கு வெளியில் அழைத்துச்சென்ற நிழல்கள்ரவி, "ரசிகர்களோட இந்த வித்தியாசமான `டேஸ்ட்' பற்றி எனக்கு முந்தின `ஷோ'விலேயே `ரிசல்ட்' கிடைச்சுது. அதை நீயும் தெரிந்து கொள்ளணும் என்றுதான் உன்னை அழைத்தேன்'' என்றார்.

"முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.

ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!

பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.

இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.

இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.

இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Similar News