சினிமா
கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் சிவகுமார்
பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் இயக்கிய "கந்தன் கருணை''யில் முருகனாக சிவகுமார் நடித்தார்.
"மோட்டார் சுந்தரம் பிள்ளை''யை அடுத்து, "தாயே உனக்காக'' என்ற படத்தில் சிவகுமார் நடித்தார்.
இது ரஷியக் கதை ஒன்றைத் தழுவி கவிஞர் கண்ணதாசன் எடுத்த படம். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.
கதாநாயகனாக சிவகுமார் நடித்தபோதிலும், சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, முத்துராமன், தேவிகா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி முதலான நட்சத்திரங்கள் கவுரவ வேடத்தில் நடித்தனர். அதாவது, எம்.ஜி.ஆர். நீங்கலாக மற்ற நடிகர்-நடிகைகள் எல்லாம் தலையைக் காட்டினார்கள்.
விளம்பரங்களில் இவர்களுடைய படங்களை பெரிதாகப் போட்டுவிட்டு, சிவகுமார் படத்தை ஒரு மூலையில் சிறிதாக போட்டனர்.
சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் என்று நினைத்து படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், ஏமாற்றம் அடைந்தனர். படம் முடிந்ததும் திட்டிக்கொண்டே வெளியே வந்தனர்.
இதனால் "தாயே உனக்காக'' வெற்றிபெறவில்லை.
1967-ல் "கந்தன் கருணை'' புராணப் படத்தை ஏ.எல்.எஸ். தயாரித்தார். "திருவிளையாடல்'' படத்தின் மூலம் இமாலய வெற்றி பெற்ற ஏ.பி.நாகராஜன், இப்படத்தை டைரக்ட் செய்தார்.
முருகன் வேடத்தில் நடிக்க, முக அழகு கொண்ட ஒரு இளைஞரைத் தேடினார், ஏ.பி.என்.
சுமார் 30 இளைஞர்களை வரச்சொல்லி, "மேக்கப்'' டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் ஏ.பி.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தபோது, இதுபற்றி குறிப்பிட்டார். "முருகன் வேடத்துக்கு, தகுந்த நடிகர் கிடைக்கவில்லை'' என்றார்.
உடனே ஏவி.எம்., "எங்களுடைய `காக்கும் கரங்கள்' படத்தில் சிவகுமார் என்ற பையனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். லட்சணமான முகம். முருகன் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பான். மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்'' என்றார்.
அதன்படி, மேக்கப் டெஸ்டுக்கு சிவகுமாரை அழைத்தார், ஏ.பி.நாகராஜன்.
சிவகுமார் சென்ற அதே சமயம், முருகன் வேடத்துக்கான இன்னொரு வேட்பாளராக விஜயகுமாரும் வந்திருந்தார்!
இருவருக்கும் முருகன் மேக்கப் போடப்பட்டது. இதில் சிவகுமார் தேர்வு பெற்றார்.
"கந்தன் கருணை''யில் சிவாஜிகணேசன் வீரபாகுவாக நடித்தார். வள்ளியாக ஜெயலலிதாவும், தெய்வானையாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள்.
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...'' என்ற பாடல் பிரமாதமாக அமைந்தது. இந்தப் பாடல் காட்சியில் சிவகுமார், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா தோன்றுவார்கள். பாடலும், பாடல் காட்சியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் சிவகுமாரின் தோற்றமும், நடிப்பும் மிகச் சிறப்பாக அமையவே, "புராணப் படங்களில் கடவுள் வேடம் போடுவதற்கு ஏற்ற நடிகர் சிவகுமார்தான்'' என்று பட உலகத்தினர் ஏகோபித்து முடிவு செய்தார்கள்.
`கந்தன் கருணை'யில் நடித்த அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"முருகன் வேடத்துக்கு என்னை தேர்ந்தெடுத்த ஏ.பி.நாகராஜன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தை சொன்னார். "முதன் முதலில் என்.டி.ராமராவை ராமர் வேடத்தில் நடிக்க வைத்து, சம்பூர்ண ராமாயணம் படத்தை எடுத்தோம். கடவுள் வேடத்திற்கேற்ற முகம் அவருக்கு இருந்தது. `உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும்' என்று ராமராவிடம் சொன்னேன். அதன்படி, 25 வருடங்களுக்கு மேலாக ராமர், கிருஷ்ணன், மகாவிஷ்ணு என்று கடவுள் வேடங்களில் நடித்தார். இப்போது அவருக்கு வயதாகி விட்டது. உங்களுக்கு இளமையும், அழகும் இருப்பதால் இன்னும் 25 ஆண்டுகள் கடவுளாக நடிக்கலாம்'' என்று கூறினார்.
கடவுள் வேடம் ஏற்று நடிக்கும்போது, உடல் ரீதியிலும், மனதளவிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். படப்பிடிப்பு நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. அதிகாலை 3 மணிக்கு மேக்கப் போட்டு, 6 மணிக்கு தெளிந்த முகத்துடனும், ஒளிமிக்க கண்களுடனும் தோன்றும்போது, `குளோசப்' காட்சிகளை ஏ.பி.என். படம் எடுப்பார்.
`உடம்பையும், மனதையும் கெடுக்கும் அத்தனை சுக போகங்களும் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கும் இடம் சினிமாத்துறை. புகை பிடிக்காமல், மது பழக்கத்துக்கு அடிமை ஆகாமல், பிற பெண்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளாமல், துறவி போல் மனக்கட்டுப்பாட்டுடன் உங்களால் இருக்க முடியுமானால், சாதாரணமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மார்க்கெட் 10 ஆண்டுகள் என்றால், இந்த சிறப்புகளுக்காக மேலும் 10 ஆண்டுகள் திரைப்படத்துறையில் புகழோடு இருக்க முடியும்' என்று ஏ.பி.நாகராஜன் அறிவுரை கூறுவார்.
இளமையில் இருந்தே நான் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்ததால், ஏ.பி.என். கூறிய அறிவுரைகளை கடைப்பிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
"கந்தன் கருணை'' படப்பிடிப்பில் கடைசியாக, பழமுதிர்ச்சோலையில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் காட்சி தருவதை ஏ.பி.என். படமாக்கினார்.
சுமார் 10 மயில்களின் இறகுகளை இணைத்து, 3 பேர் அமரும் அளவுக்கு பெரிய மயில் செய்து அதில் என்னையும், வள்ளியாக நடித்த ஜெயலலிதா அவர்களையும், தெய்வானையாக நடித்த கே.ஆர்.விஜயா அவர்களையும் அமரச் செய்தனர்.
"வள்ளி - தெய்வானையுடன் அமர் சோலை - தங்கமயில் விளையாடும் பழமுதிர்ச்சோலை'' என்று சீர்காழி கோவிந்தராஜன் பாட, மயில் வாகனத்தின் மீது எங்கள் மூவரையும் பார்த்த கே.ஆர்.விஜயாவின் தாயாருக்கு அருள் வந்துவிட்டது. பழனியில் நீண்ட காலம் வாழ்ந்தவர். பாடலின் உத்வேகம், காட்சியின் அழகு இரண்டும் சேர்ந்ததால், பக்தி மேலீட்டால் அவர் சாமி ஆட ஆரம்பித்து விட்டார்!
கற்பூரம் கொளுத்தி நெற்றியில் விபூதி பூசி அவரை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.