சினிமா
193 படங்களில் நடித்த சிவகுமார் மாறுபட்ட வேடங்களில் சாதனை படைத்தவர்
193 படங்களில் நடித்த சிவகுமார் மாறுபட்ட வேடங்களில் சாதனை படைத்தவர்
"விதம் விதமான கதாபாத்திரங்களில் 193 படங்களில் நடித்தவர். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் படைத்தவர். தன்னுடைய கலை உலக வாரிசாக சூர்யாவை உருவாக்கி இருப்பவர். அவர்தான் சிவகுமார்.
சிவகுமார் பிறந்தது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காசி கவுண்டன் புதூர் என்ற சிற்றூர். தந்தை ராக்கியா கவுண்டர். தாயார் பழனியம்மாள். சிவகுமார் பிறந்த தேதி 27-10-1941.
சிவகுமாரின் தந்தை முருக பக்தர்; திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்; ஜாதகம் பார்ப்பதில் வல்லவர். சிவகுமார் பிறந்ததும், குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தார். "இந்தக் குழந்தைக்கு ஓராண்டு நிரம்புவதற்குள், தந்தை இறந்து விடுவார்'' என்று கூறினார்.
அவர் சொன்ன வாக்கு பலித்தது. சிவகுமாருக்கு 10 மாதம் கூட நிறையாதபோது, தந்தை காலமானார். அப்போது அவருக்கு வயது 33 தான்.சிவகுமாருக்கு ஒரு அக்கா; ஒரு அண்ணன். 32 வயதிலேயே விதவையாகிவிட்ட பழனியம்மாள் மீது மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு விழுந்தது.
சிவகுமாரின் அண்ணன் சண்முகம் 10-ம் வகுப்பு படித்து முடித்தான். மூத்த மகன் குடும்பச் சுமையில் ஒரு பகுதியை தாங்குவான் என்று பழனியம்மாள் எண்ணியிருந்த வேளையில், `பிளேக்' நோயால் தாக்கப்பட்டு, அந்த 16 வயது இளைஞன் மரணம் அடைந்தான்.
அப்போது சிவகுமாருக்கு வயது 4.கோவில் பூஜை செய்யும் பழனி பண்டாரத்திடம் "அ'', "ஆ'' கற்றுக்கொண்ட சிவகுமார், சொந்த கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில், முதல் வகுப்பில் சேர்ந்தார்.
இது, தொழில் மேதை ஜி.டி.நாயுடு பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் கெட்டிக்காரராக இருந்த சிவகுமார், `இரட்டை பிரமோஷன்' பெற்று, சூலூர் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேரச் சென்றார். அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
சிவகுமாரை 6-ம் வகுப்பில் சேர்த்தால், அவர் 14-ம் வயதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டி இருக்கும். ஆனால், 15 வயது பூர்த்தியாகியிருந்தால்தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பது விதி. எனவே, அவரை 5-ம் வகுப்பில்தான் சேர்த்தார்கள்.
சிவகுமாரின் தந்தை 14 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்தார். அது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் மஞ்சள் சோளம், பருத்தி, தினை, கேழ்வரகு போன்ற தானியங்களும், பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, கொள்ளு போன்ற பயிறு வகைகளும் விளையும். படிப்பு நேரம் போக, அம்மாவுக்கு துணையாக விவசாயத்தில் ஈடுபடுவார், சிவகுமார். அம்மா விவசாய வேலைகளை கவனித்ததால், அக்கா சுப்புலட்சுமிதான் சிவகுமாருக்கு சாதம் வடித்து பள்ளிக்குக் கொண்டு போக தூக்குப் பாத்திரத்தில் போட்டுக்கொடுப்பார்.
அம்மாவுக்கு உதவியபடி படிப்பையும் ஒழுங்காக கவனித்து எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினார். ஆறாம் வகுப்பில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை ஒன்றாக படித்த 25 மாணவர்களும், 10 மாணவிகளும் ஆசிரியர்களுடன் `குரூப்' போட்டோ எடுக்க விரும்பினார்கள். போட்டோவுக்கும், சுவீட், காரம், காபி சாப்பிடவும் ஒவ்வொரு மாணவனும் ஐந்து ரூபாய் கட்டுவது என்று முடிவாயிற்று.இது பற்றி அம்மாவிடம் சொல்லி, 5 ரூபாய் கேட்டார், சிவகுமார். குடும்ப நிலை காரணமாக அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது.
"இப்ப அந்த போட்டோ எடுக்கலைன்னா ஒன்றும் குடிமுழுகிப் போகாது. காசு இல்லே, போ!'' என்று கூறிவிட்டார். பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கப்பட்டபோது, சிவகுமாரும் அவருடைய நிலையில் இருந்த வேறு சில மாணவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். "பணம் இல்லாவிட்டால் என்ன? குரூப் போட்டோவுக்கு மட்டுமாவது நில்லுங்கடா!'' என்று மற்ற மாணவர்கள் கெஞ்சிக் கேட்டும், சிவகுமாரும், அவர் நண்பர்களும் சம்மதிக்கவில்லை.
பிற்காலத்தில் சிவகுமார் பெரிய நடிகராகி, ஊர் பக்கம் போகும்போது, சில நண்பர்களின் வீடுகளில் அந்த குரூப் போட்டோ மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பார். அவர் தொண்டை அடைக்கும். "என்னுடைய 40 வருட சினிமா - சின்னத்திரை வாழ்க்கையில், கோடிக்கணக்கான பிலிம் பிரேம்களில் என் உருவம் பதிவாகியிருக்கும்.
ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த குரூப் போட்டோவுக்கு ஈடில்லை. அந்தப் படத்தில் நான் இடம் பெறாமல் போனதால், இப்போது எந்தப் பள்ளி விழாவுக்கு நான் சென்றாலும், குரூப் போட்டோ எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன். புகைப்படக்காரருக்கு உரிய பணத்தை நானே கொடுத்து விடுகிறேன்'' என்று கூறுகிறார், சிவகுமார். சிவகுமாருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமும், ஆற்றலும் இருந்தன.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது, விஞ்ஞான பாடத்தில் முதுகு எலும்பின் படத்தை வரையவேண்டியிருந்தது. வரைவதற்கு மிகவும் சிரமமான படம். எல்லா மாணவர்களும் திணறினார்கள். ஆனால் சிவகுமாரோ, மூன்றே நிமிடங்களில் 33 எலும்புகளையும் வில்போல் அழகாக வரைந்து விட்டார்.
பள்ளியில் ஓவியம் வரைய வேண்டிய நாட்களில் எல்லாம், மற்ற மாணவர்கள் சிவகுமாருக்கு ஒரு `சாக்லேட்' வாங்கிக் கொடுத்துவிட்டு, படத்தை அவரிடம் வரைந்து வாங்கிக்கொண்டு போவார்கள்! எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது சிவகுமாரின் திட்டம்.
ஆனால் அவருடைய ஓவியத் திறனைக் கண்ட நண்பர்கள், "ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படி. பேரும், புகழும் பெறலாம்'' என்றார்கள். எனவே, சென்னையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அனுப்பினார், சிவகுமார்.