தலைப்புச்செய்திகள்
எலெக்ட்ரிக் சார்ஜிங்

வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பங்களில் சார்ஜிங் போர்ட் - கேரளா அதிரடி

Published On 2021-12-17 14:55 IST   |   Update On 2021-12-17 14:55:00 IST
கேரளா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புதுவிதமான சார்ஜிங் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துவிட்டது. விலை உயர்வை தொடர்ந்து பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துவருகிறது.

இதுதவிர மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாத நிலையிலேயே இருக்கிறது. 



இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்த பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கேரளா மாநில மின்துறை சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புது திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி மின்கம்பங்களில் எலெக்ட்ரிக் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சார்ஜர்களை எலெக்ட்ரிபை (Electrify) எனும் செயலி மூலம் பயன்படுத்தலாம். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பத்து சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சார்ஜ் செய்வதற்கான யூனிட் ஒன்றுக்கு ரூ. 9 கட்டணம் (வரிகள் இன்றி) வசூலிக்கப்படுகிறது. 

Similar News