ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2018-04-15 15:43 IST   |   Update On 2018-04-15 15:43:00 IST
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடல்களை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வலைத்தளத்தின் படி அமியோ பேஸ் எடிஷன் டாப்-எண்ட் மாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புற்தில் சில அம்சங்களை மேம்படுத்தி புதிய அமியோ பேஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் புதிய மாடலில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புற ஸ்பாயிலர், பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற பக்காவாட்டு கண்ணாடிகள் (ORVM), புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், அமியோ பேஸ் மாடலில் கிரில் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் மிரர்லின்க், ஆப்பிள் கார் பிளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை. 



இதனால் வழக்கமான ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆக்ஸ்-இன் கொண்டுள்ளது. இதேபோன்று ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்படவில்லை. எனினும் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமியோ பேஸ் எடிஷனில் 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்கியூ கொண்டுள்ளது. இந்த மோட்டார் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 

இத்துடன் புதிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய 1.0 லிட்டர் இன்ஜின் 75 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

வழக்கமான ஃபோக்ஸ்வேகன் அமியோ விலை ரூ.7.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேஸ் எடிஷன் விலை ரூ.6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் எடிஷன் ஃபோர்டு ஆஸ்பையர், மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News