ஹீரோ - ஹார்லி கூட்டணியில் புது பைக் - வெளியீடு எப்போ தெரியுமா?
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார்சைக்கிள் உருவாக்குவதை ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புது இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் மோட்டார்சைக்கிள் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றியுடம் தகவல் வெளியிட்டு உள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பிரீமியம் பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் நிரன்ஜன் குப்தா முதலீட்டாளர் கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து புது பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் புது மோட்டார்சைக்கிள் மிடில்வெயிட் பிரிவில், 350சிசி திறன் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. புது மாடல் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லியின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவை கவனித்து வருகிறது. மேலும் நாடு முழுக்க டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 300S மற்றும் எக்ஸ்-பல்ஸ் 400 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என நிரன்ஜன் தெரிவித்தார்.