ஆட்டோமொபைல்
ஹோண்டா சி.பி.ஆர்.1000 ஆர்.ஆர். ஃபயர்பிளேட்

ஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-11-16 08:42 GMT   |   Update On 2019-11-16 08:42 GMT
ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் இரண்டு புதிய பிரீமயிம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.



இரு சக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் (இ.ஐ.சி.எம்.ஏ.) தனது இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. 

சி.பி.ஆர்.1000ஆர்.ஆர்.ஆர். பயர்பிளேட் மற்றும் பயர்பிளேட் எஸ்.பி. மாடல் மோட்டார் சைக்கிள்கள் காண்போரை வெகுவாக கவர்ந்திழுத்தது. பொதுவாக இதுபோன்ற சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்பதால் இதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் முன்புறம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய இரட்டை ஹெட்லைட் அதன் நடுப்பகுதியில் காற்று சென்று திரும்பும் வகையிலான வடிவமைப்பு, சாவி தேவைப்படாத அதாவது பொத்தானை இயக்குவதன் மூலம் செயல்படும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்த மோட்டார்சைக்கிளில் 999.9 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது 214 பி.ஹெச்.பி. @ 14,500 ஆர்.பி.எம்., 113 என்.எம். டார்க் @ 12,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 5 கிலோ அதிகரித்து தற்போது 201 கிலோவாக உள்ளது. இதில் அக்ரபோவிக் சைலன்ஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தும் வகையிலானது. இதன் என்ஜின் வடிவமானது மோட்டோ ஜி.பி. பைக்குகளில் உள்ளதைப் போன்று உள்ளது. இது 81 மி.மீ. மற்றும் 48.5 மி.மீ. அளவினதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 கியர்களைக் கொண்டுள்ளது. இதன் சேஸிஸ் அலுமினியத்தால் ஆனது. ஸ்திரமாக ஓடுவதற்கு வசதியாக 1,455 மி.மீ. விட்டமுடைய சக்கரங்களைக் கொண்டுள்ளது.

முன்புறம் பி.பி.எஃப். ஃபோர்க் மற்றும் பி.எஃப்.ஆர்.சி. மோனோ ஷாக் அப்சார்பர்களைக் கொண்டுள்ளது. இரண்டு சக்கரங்களுமே டிஸ்க் பிரேக் வசதி கொண்டவையாகும். 9 நிலைகளிலான டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி உள்ளது. இதன் முன்புறம் 5 அங்குல தொடு திரை உள்ளது. இந்த இரு மாடலுமே கண்கவர் வண்ணத்தில் வெளிவர உள்ளன. 

முதலில் சர்வதேச சந்தையிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகத்தின்போது விலை விவரங்கள் வெளியிடப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News