ஆட்டோமொபைல்
போர்ஷ் கரெரா எஸ்

போக்குவரத்து விதிமீறல் - இந்தியாவில் ரூ. 28 லட்சம் அபராதம் செலுத்திய நபர்

Published On 2020-01-10 10:37 GMT   |   Update On 2020-01-10 10:37 GMT
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால் கார் உரிமையாளருக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ரஞ்ஜித் தேசாய் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிநாட்டில் இருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.

அந்த காரில் அவர் நவம்பர் 28-ந்தேதி ஆமதாபாத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அந்த சொகுசு கார் நம்பர்-பிளேட் இல்லாமல் வந்ததால் போலீசார் ஆவணங்களைக் கேட்டனர். ஆனால் கார் டிரைவரால் ஆவணங்களை கொடுக்க இயலவில்லை. பதிவு எண் இல்லாத குற்றத்துக்காக ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அந்த அபராதத் தொகையை செலுத்துவதற்காக ஆமதாபாத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ரஞ்ஜித்தேசாய் சென்றார். அப்போது காரின் ஆவணங்களை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



காருக்கு வாழ்நாள் வரி செலுத்தப்படாமல் இருப்பது அப்போது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வாழ்நாள் வரி கட்டாததற்காக ரூ. 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்துக்கு வட்டியாக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மொத்தம் ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில் அதிபர் தேசாய் உடனடியாக அந்த அபராத தொகையை செலுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ரஞ்ஜித் தேசாய் தனது காரை மீட்டு திரும்ப எடுத்துச் சென்றார். அவர் செலுத்திய ரூ.28 லட்சம் அபராத தொகைதான் புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராத தொகையாகும்.

இந்தியாவில் ஒரு காருக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் அபராத தொகை ரசீதையும், கார் படத்தையும் போக்குவரத்து போலீசார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Tags:    

Similar News