லட்சுமி கடாட்சம் நிறைந்த வருடம்
வேகமான விருச்சிக ராசியினரே!
எடுத்த காரியத்தில் தன்னம்பிக்கை மற்றும் துணிவுடன் செயல்படும் உங்களுக்கு விசுவாசு தமிழ் புத்தாண்டு அஷ்டலட்சுமி யோகத்தை தரப்போகிறது.ஆண்டின் துவக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்பஸ்தானத்தையும் பார்ப்பார்.
14.5.2025 முதல் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பன்னிரண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தையும் பார்ப்பார்.
ராகு பகவான் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கும், கேது பகவான் பத்தாம் இடமான தொழிற் ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். இந்த வருட கிரகங்களின் சஞ்சாரத்தால் விசுவாசு ஆண்டில் ஏற்படக்கூடிய சுப பலன்களை பார்க்கலாம்.
விசுவாவசு ஆண்டிற்கான பொது பலன்கள்
இந்த தமிழ் புத்தாண்டில் வருட கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது. 12 ராசிகளில் அதிக சுப பலன் பெறப்போகும் ராசியில் விருச்சிக ராசியும் ஒன்றாகும்.மே மாதத்தில் நடைபெறவிருக்கும் குருப் பெயர்ச்சி அர்தாஷ்டமச் சனியின் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் மீட்டுத்தரப் போகிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகமாகும்.
தன வரவு மும்மடங்காகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல மக்கட்பேறும், விசுவாசமான வேலையாட்களும் கிடைப்பார்கள். தலைக்கு வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு சென்று விடும் என்று உறுதியாக கூறலாம். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும் யோகம் உள்ளது.
சிலர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வார்கள். சிலர் வெளியூர் ஒப்பந்தப் பணி முடிந்து ஊர் திரும்புவார்கள். குடும்பத்தினர் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவன், மனைவி உறவில் நிலவிய பனிப்போர் விலகும். உடன் பிறந்தவர்கள், மூத்த சகோதர வழியில் லாபம் உண்டாகும்.சிலர் மறுமணம் செய்து கொள்ளலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். தேவையற்ற அலைச்சலால் அசதி, ஆரோக்கியத் தொல்லைகள் கூடும. சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.
தொழில் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் நிகழ்ந்தாலும் அவற்றினால் நன்மையே உண்டாகும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும்.தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும்.
சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து விலகி தனிக்குடித்தனம் செல்வார்கள்.சிலர் கொடுக்கல்வாங்கல், வரவு செலவில் ஏமாற்றம் அல்லது இழப்பை சந்திக்கலாம்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் உதவியும் உண்டு உபத்திரமும் உண்டு. அடுத்தவர் பேச்சைக் கேட்டு உங்களுடைய மூளை குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம் வரும். படுத்தவுடன் தூக்கம் பெரிய வரப்பிரசாதம். அந்த நிம்மதியான தூக்கத்தை குருபகவான் இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு வழங்குவார்.
பொருளாதாரம்
பண வரவை, பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் 2, 5, 8, 11- ம் மிடங்களுக்கு பொருளாதார கிரகங்களான குரு மற்றும் சனியின் சம்பந்தம் உள்ளது.அதிர்ஷ்டத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உங்களைத் தேடி வரும்.சீரான தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.
லட்சுமி கடாட்சத்தால் அடமான நகைகள், சொத்துக்களை மீட்க கூடிய நேரம்.கையில் தாராளமாக பணம் புழங்கும்.தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.மண்,மனை, வாகனம் தங்க நகை வாங்கும் யோகம் உண்டு. முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
விசாகம் 4
மனம் மகிழ்ச்சியாகவும் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நடக்க வேண்டிய நல்லவைகள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை, தைரியம் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழ்நிலை உண்டாகும்.காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். பணவரவு தாரளமாக இருந்தாலும், தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். சொத்துக்கள் விருத்தி அடையும். தாய்க்கு பண வரவு ஏற்படும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.
அனுஷம்
நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம்.
தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
குடும்ப சுமை குறையும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி கைகூடும்.
கேட்டை
பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும், செலவும் உண்டு. அர்த்தாஷ்டமச் சனி காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் சாதனைகளாக மாறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாத விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும்.
திருமணம்
விருச்சிக ராசியினருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும்.சுய ஜாதக ரீதியாக பிரச்சனை இருந்தால் தோஷ நிவர்த்தி பெற்று திருமணம் நடைபெறும். நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் வாழ்க்கைத் துணையாக வர வாய்ப்புள்ளது. அர்த்தாஷ்டமச் சனி முடிவதால் திருமணத்தை நடத்த நல்ல வரன் கிடைக்கும்.
15.5.2025 அன்று முதல் குடும்ப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பார். 29.3.2025 ம் அன்று முதல் 7ம்மிடத்தை சனி பகவான் பார்ப்பார். எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் நடைபெறும். குரு பார்வைக்கு மட்டுமல்ல சனி பகவானின் பார்வைக்கும் திருமணத்தை நடத்தும் சக்தி உண்டு.
பெண்கள்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். திடீர் பதவி, புகழ், கெளரவம் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.பிள்ளைகளின் முன்னேற்றத்தால் பெருமை அடைவீர்கள்.
மாணவர்கள்
படிப்பிற்கு உறுது ணையாக இருக்கும் 4ம்மிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. கற்கும் ஆர்வம் கூடும்.10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். மாணவர்களுக்கு வினாத்தாள் எளிமையாக இருக்கும். உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும்.
முதலீட்டாளர்கள், வியாபாரிகள்
தொழில் தந்திரம் மிகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். மதி நுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.பல தொழில் துறை பற்றிய அறிவு உண்டாகும். கற்ற கல்விக்கு தகுந்த தொழில் கிடைக்கும். ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கெளரவம் கிடைக்கும். வருமானம் கூடும்.
பழைய பாக்கிகள் வசூலாகும்.வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமூக நிலை ஏற்படும். தொழில் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கவுரவப் பேராட்டத்தால் உடன் பிறந்தவர்களுடன் பகை உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள்
குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் வேலை தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும்.வேலை தேடுபவர்க ளுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும்.
தடைபட்ட வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி வெகு விரைவில் கிடைத்துவிடும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள்.அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்
மன சஞ்சலத்தில் இருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும். சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும். வீட்டில் பயன்படாத பழைய பேட்டரி, துணிகள், கடிகாரம், செருப்புகள் ஆகியவற்றை நீக்கவும்.