வெற்றி ஒன்றையே குறிக்கோளாக்கி செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருக்கும் குருவோடு இணைந்து 'குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சந்திரனை, குரு பார்ப்பதால் 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குகிறது. எனவே இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றிபெறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். கல்யாண முயற்சி கைகூடும்.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்தில் குருவும், செவ்வாயும் இணைந்து உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். இதனால் 'குரு மங்கள யோகம்' செயல்படுகிறது. எனவே மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தொழில் வெற்றி நடைபோடும். தொகை வரவும் திருப்தி தரும். இடம், பூமி வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரம் இது.
புதன் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். திட்டமிடாத சில காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அதே நேரம் லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால், ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும்.
சிம்ம - சுக்ரன்
ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் பொழுது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானம் வந்துசேரும். பழைய நகை களைக் கொடுத்து விட்டு, புதிய நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 19, 20, 24, 25, ஆகஸ்டு: 4, 5, 8, 9, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.