null
நல்லவராக வாழ்ந்துகாட்ட நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சி்ம்மத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளது. அர்த்தாஷ்டமச் சனி மற்றும் அர்த்தாஷ்டம ராகுவை குரு பார்த்து புனிதப்படுத்துவதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வநிலை உயரும். தொழில் வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். பார்க்கும் குருவை பலப்படுத்துவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம் என்பதால் வியாழன்தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் புதன். அவர் 8-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலத்தைச் சீராக்கிக் கொள்ள புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பு உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். சுபச் செய்திகள் அதிகம் வரும் நேரமிது.
ரிஷப - சுக்ரன்
ஆனி மாதம் 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் அதைச் செய்ய இயலும். வசதி வாய்ப்புகள் பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைத்தவர்களுக்கு எடுத்த முயற்சி கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரமிது.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். அதே நேரத்தில் குருவின் பார்வையும் சனி மீது பதிவதால் நல்ல பலன்கள் இல்லம் வந்துசேரும். ஒருசில காரியங்களை ஒருமுறைக்கு இருமுறை செய்ய நேரிடும். என்றாலும் கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும். அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திடீர் இடமாற்றங்கள் அல்லது உத்தியோக மாற்றங்கள் வரலாம். இடம், பூமி சம்பந்தப்பட்ட காரியங்களில் எடுத்த முயற்சிகள் கடைசி நேரத்தில் கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி மற்றும் சம்பள உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவியர்களுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடி வரும். திருமண முயற்சி வெற்றிபெறும்.
இம்மாதம் கோமாதா வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.