விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2025-10-16 07:38 IST   |   Update On 2025-10-16 07:39:00 IST

விருச்சிக ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம் பெற்ற குரு பகவான் பார்க்கிறார். அது 5-ம் பார்வையாக இருப்பதால் பொன் கொழிக்கும் மாதம் இது. எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து ஆதாயம் தரும் தகவல் வந்து கொண்டேயிருக்கும். 'நீங்கள் கொடுத்து வைத்தவர்' என்று கூட இருப்பவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை உச்சம் அடையும். புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

உச்சம் பெற்ற குரு

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பதால், இக்காலத்தில் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிக அளவில் வந்து மகிழ்விக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார அந்தஸ்து தேடிவரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள்.

சனி - ராகு சேர்க்கை

மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். 'கும்ப ராகு, குடம் குடமாக கொடுக்கும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

விருச்சிக - செவ்வாய்

ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கே வருவது யோகமான நேரமாகும். இடம், பூமி வாங்கும் வாய்ப்பு உண்டு. எதைச் செய்ய நினைத்தாலும், அதை உடனடியாகச் செய்து முடிக்கும் வகையில் பொருளாதார நிலை இடம் கொடுக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். இது ஒரு பொற்காலமாகும்.

துலாம் - சுக்ரன்

ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயம் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இடமாற்றம் எளிதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுபச் செய்தி உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 19, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 11, 12, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

Similar News