துலாம் - ஆண்டு பலன் - 2026

2025 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-01-01 09:50 IST   |   Update On 2025-01-01 09:51:00 IST

கல்யாணக் கனவுகள் நனவாகும் துலாம் ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கும் பொழுது அஷ்டமத்தில் குரு சஞ்சரிக்கிறார். 5-ம் இடத்தில் சனி இருக்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். கடுமையாக முயற்சித்தும் சென்ற ஆண்டு முடிவடையாத காரியங்கள் இந்த ஆண்டு முடிவடையும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் ராசியை குருபகவான் பார்க்கப் போகிறார். மே மாதத்திற்கு பிறகு அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

புத்தாண்டின் கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் இந்த ஆண்டு நடைபெறும். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பலம்பெற்று சஞ்சரிப்பதால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை பாக்கியங்களையும் படிப்படியாக வழங்குவார். போதிய வருமானம் வந்துசேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும்.

'அஷ்டமத்தில் குரு இருக்கிறாரே' என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், அவர் அஷ்டமத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பது யோகம்தான். அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். 6-ம் இடத்து ராகுவும், 12-ம் இடத்து கேதுவும் உத்தியோக முன்னேற்றமும், உயர்பதவியும் கொடுப்பர். இந்த ஆண்டு முழுவதும் நற் பலன் கிடைக்க யோகபலம் பெற்ற நாளில் நாக தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, குருவிற் குரிய முக்கிய தலங்களைத் தேர்ந்தெடுத்தும் வழிபடுங்கள்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

வருடத் தொடக்கத்தில் 26.4.2025 அன்று ராகு - கேதுக்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் ராகு, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அத்தனையும் செய்வார். குறிப்பாக கல்வி, உத்தியோகம், திருமணம், கடல்தாண்டிச் சென்று பணிபுரியும் வாய்ப்பு ஆகியவை சிறப்பாக அமையும்.

உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டைப் பராமரிக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மூத்த சகோதரர் களால் வந்த பிரச்சினை அகலும். முக்கியப் பொறுப்புகளை உயர் அதிகாரிகள் உங்களுக்கு வழங்குவர். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.

மிதுன - குரு சஞ்சாரம்

11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகின்றது. உங்கள் ராசியிலேயே குருபார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். கடமையை சரிவரச் செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகைக் கிரகமாக இருந்தாலும், குரு பார்வைக்கு மகத்துவம் அதிகம். சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். மந்தநிலை மாறி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குருவின் பார்வை மூன்றாம் இடத்தில் பதிவதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உங்கள் திறமை பளிச்சிடும். குடும்பம், தொழில், திருமணத்தில் இருந்த சிக்கல் தீரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும்.

பஞ்சம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சென்ற வருடத்தில் தடையாக இருந்த காரியங்கள் எல்லாம் இப் பொழுது தானாக நடைபெறும். பிள்ளைகள், பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பர். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். அதிகார பதவிகள் தானாக வந்துசேரும். ஆன்மிகப் பணியில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கும் வாய்ப்பு உண்டு.

கும்ப - சனி சஞ்சாரம்

வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 2, 7, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே எதிர்பாராத சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதிற்கினிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைத்த ஆசை நிறைவேறும். லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.

கடக - குரு சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

தள்ளிப்போன சுபகாரியங்கள் தானாக நடைபெறும். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு வேண்டிய சலுகை களைக் கொடுப்பர்.

சுக ஸ்தானமும், ருண ரோக ஸ்தானமும் புனிதமடைவதால் ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பயணம் மகிழ்ச்சி தரும். ஆலயத் திருப் பணிகளுக்கு உதவி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற நண்பர்கள் வழிகாட்டுவர்.

குருவின் வக்ர காலம்

18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலத்தில் நன்மைகள் நடைபெறும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக்கிரகமாக விளங்குவதால் அது வலிமை இழக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு, மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.

சனியின் வக்ர காலம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் 2.7.2025 முதல் 17.11.2025 வரை வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் துணிந்து செய்ய இயலாது. வருமானப் பற்றாக்குறை வளர்ச்சியைப் பாதிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். உடல்நலத்தில் மிக மிக கவனம் தேவை.

பிள்ளைகள் வழியிலும், உடன்பிறப்பு வழியிலும், பூர்வீகச் சொத்துகள் வழியிலும் பிரச்சினை என்ற நிலை ஏற்படும். இக்காலத்தில் சுயஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்வதோடு, செவ்வாய் - சனி பார்வை காலத்தில் கவனம் தேவை.

Similar News