null
வசீகரமான துலாம் ராசியினரே
துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 8ம்மிடமான ஆயுள், வம்பு வழக்கு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 12ம்மிடமான அயன, சயன மோட்ச ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது உப ஜெய ஸ்தானமாகும். அசுப கிரகங்கள் உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு மிகுதியான நல்ல பலன்கள் நடக்கும். ஆனால் ஆதிபத்திய ரீதியாக நான்கு, ஐந்தாம் அதிபதி ஆறாம் இடத்திற்கு செல்வது சற்று சுமாரான பலன்களையே ஏற்படுத்தி தரக்கூடிய அமைப்பாகும்.
ஆறாமிட சனியின் பொது பலன்கள்
சுய தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். தொழிலை விரிவுபடுத்த தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உபரி பணம் சேமிப்பாக முதலீடாக மாறும் அற்புத காலம். பணப் பரிவர்தனை சுமூகமாக நடைபெறும். பண வரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக் குறைகள் அகலும். எதிர்பாரத தன வரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.
ஆனால் அநாவசிய ஆடம்பர செலவு செய்து விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம். உணவுத் தொழில் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அரசியல்வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.
அரசாங்க ஒப்பந்ததாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தம் வருமானத்திற்கு மீறிய செலவில் சிக்கலை மாட்டி வைக்கும். நீங்கள் செய்யாத தவறுக்கு வீணாக உங்கள் பெயரில் கலங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்தவர் விசயத்தில் நீங்கள் தலையிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். முகத்துக்கு பின்னால் குறை கூறியவர்கள் முகத்திற்கு நேரே பேசுவார்கள். சாட்சி இல்லாமல் தண்டிக்க வழி இல்லாமல் மௌனமாக இருக்க நேரும். எந்த வேலையிலும் மனம் ஒன்றாமல் பற்றற்ற நிலையில் மனம் இருக்கும். சிறிய செயலுக்கு அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும். உழைப்பிற்கான பலன் உங்களை தேடி வருவதில் காலதாமதமாகும். தொழில் நிமித்தமான அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். வெற்றி பெற சிறிது பேராடினாலும் வெற்றி உங்களுக்கே. மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும் மற்றபடி உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அலுவலகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு மரியாதை கிடைக்கும். உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். உங்களின் சமுதாய இன வளர்ச்சிக்கு உதவி செய்து உங்களை வெளி உலகத்திற்கு முக்கிய பிரமுகராக அடையாளம் காட்ட முனைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும்.
இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். சில துலாம் ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும். குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் முடிவுக்கு வரும்.
பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய , புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்களுக்கு விருது கிடைக்கும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.
மூன்றாம் பார்வை பலன்கள்
சனியின் 3ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் வம்பு , வழக்கு ஸ்தானத்திற்கு இருப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுள். ஆயுள் தீர்க்கம். ஒரு சிலருக்கு இனம் புரியாத நோய் , தீர்க்க முடியாத , தீராத நோய் தாக்கம் உருவாகும். எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான காலம். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள் .இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.சனி பகவானின் அருள் இருந்தால் மட்டுமே பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். தசா புத்திகள் சாதகமான அரசியல் வாதிகள் ஜெயிப்பது உறுதி. ஜனன கால ஜாதகத்தில் சனி, ராகு/கேது தசை நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் .இது போன்ற தசை நடப்பவர்கள் வெளிநாட்டிற்கு சென்று கஷ்டப்படும் நிலை ஏற்படும்.
சனியின் ஏழாம் பார்வை பலன்கள்
சனியின் 7ம் பார்வை 12ம்மிடமான அயன,சயன, விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளி நாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள்.
இந்த ஆண்டில் துலாம் ராசியினரை சனி பகவான் வெளிநாட்டு காற்றை சுவாசிக்க வைப்பார். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடு இருக்கும் போன சுவடு தெரியாது. தாங்க முடியாத விரயம் மன உளைச்சலை தரும். துலாம் ராசி விவசாயிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இயன்ற வரை பெரிய கடன் வாங்கி விவசாயம் செய்வதை தவிர்க்க வேண்டும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை நேரும். நிம்மதியான தூக்கம் இருக்காது.தசாபுத்தி சாதகமற்ற அரசியல் வாதிகள் களத்தில் இறங்கும் முன்பு சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிரிகளை வெல்ல 6 ம் அதிபதி அல்லது 6ல் நின்ற கிரகம் பலம் பெற வேண்டும் என்பது ஜோதிட விதி என்றாலும் தசாபுத்தி சாதகமாக இல்லாமல் சாதிக்க முடியாது.
சனியின் 10ம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை 3ம்மிடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் வாஸ்து குறைபாடு உள்ள வீட்டிற்கும் இடம் பெயர நேரும். உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம் , ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.உங்களின் இளைய உடன் பிறப்புகளால் பொருள் இழப்பு, நட்டம் ஏற்படும்.
ஒரு சிலருக்கு உஷ்ணம் தொடர்பான நோயால் குறுகிய கால பாதிப்பு இருக்கும். உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்ற காலம். இந்த சனிப்பெயர்ச்சியால் கடனும் விரயமும் உங்களுக்கு வரப்போவது உறுதியாகி விட்டது. கடன் வாங்கி சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. தாய், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுதும் துலாம் ராசி குழந்தைகள் மாநில, மாவட்ட , பள்ளி அளவில் முதல் மதிப்பெண் உறுதி.
திருமணம்
திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்கள்
பெண்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நேரம். சுப விசேஷங்கள் நடைபெறும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவின் வருகையால் குடும்பம் கலகலப்பாக இருக்கும். பேரன், பேத்தி பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை.
கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும்.சகோதரர் வகையில் வரவு உண்டு. சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தவறான சிந்தனையில் மனதை அலை பாய விடாமல் இருந்தால் மட்டுமே கவுரவத்தை கட்டிக் காக்க முடியும்.
பரிகாரம்
சிவன் கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிகளை செய்ய வேண்டும். பெளர்ணமி நாட்களில் விரதம் இருந்து கிரிவலம் வர வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406