என் மலர்

  துலாம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

  துலாம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள்

  ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

  நான்காமிடத்தில் சனி, நல்ல விரயங்கள் இனி!

  துலா ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று நான்காமிடத்திற்கு செல்கின்றார். இதை 'அர்த்தாஷ்டமச்சனி' என்று சொல்வது வழக்கம். அஷ்டமத்துச் சனி நடைபெறும் பொழுது, ஏற்படும் கெடுபலன்களில் சரிபாதி அளவு இக்காலத்தில் உருவாகும் என்பர். ஆனால் உங்கள் ராசிக்கான அதிபதி சுக்ரன், சனி பகவானுக்கு நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் கெடுபலன்களைக் கொடுக்கமாட்டார். மேலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், சுக ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' உருவாகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். சுகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.

  தேவைக்கேற்ற பணம் வரும்

  டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப்போகின்றார். இது தாய், சுகம், கல்வி விருத்தி, வீடு, இடம், வாகனம் போன்றவற்றைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவார். மகர ராசி அவருக்கு சொந்த வீடாகும். ஆயுள்காரகன் என்று சனியை வர்ணிப்பதால், உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், உடன்பிறப்புகளுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வரும். எதிலும் கூட்டு முயற்சி உகந்தது. கல்வி, கட்டிடப்பணி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடிவரும்.

  சனியின் பார்வை பலன்கள்

  உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும் 6, 10 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் ஆரோக்கியம், செயல்திறன், கவுரவம், எதிர்ப்பு, வியாதி, கடன் சுமை, மனக்குழப்பம், பங்காளிப் பகை, தைரியம், தொழில், ஜீவனம், அரசுப்பணி, வணிகம், போன்றவற்றை எடுத்துரைக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால், அதற்கு ஏற்ப பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசியைச் சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள்.

  சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்கள் வந்து அலைமோதும். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் கடைசியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று ஒருசிலர், உத்தியோக மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்து கூட்டுமுயற்சியில் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கூட்டாளிகள் ஜாதகத்தில் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நல்லது.

  சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. பழைய தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

  சனியின் பாதசாரப் பலன்கள்

  27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சூரியன் உங்களுக்கு லாபாதிபதியாகவும் விளங்குவதால் தொழில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

  28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.

  27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் மிகவிரைவில் முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். 'வீடு கட்டி வைத்தும் வாடகைக்கு ஆள் வரவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் வரப்போகின்றது. இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடை பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

  குருப்பெயர்ச்சிக் காலம்

  கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 5-ம் இடத்திற்கு குரு வருகின்றார். அப்பொழுது குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'ஆறில் குரு ஊரில் பகை' என்பதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். குருவின் நேரடிப்பார்வை பதிவதால் தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

  ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

  21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சப்தம ராகுவின் ஆதிக்கத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

  8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சலுகைகளும் கிடைக்கும்.

  வெற்றி பெற வைக்கும் வழிபாடு

  சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. ராமதூதன் வழிபாடு சேமிப்பை உயர்த்தும்.

  ×